உண்டியலை உடைத்து பணம் திருட்டு
உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
திருச்சி தென்னூரில் பிரசித்திபெற்ற உக்கிரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து வரும் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50), சம்பவத்தன்று இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை அவர் வந்து பார்த்த போது, கோவிலின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு, காணிக்கை காசு, பணம் சிதறிக்கிடந்தன. உடனே அவர் இதுபற்றி தில்லைநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. உண்டியலில் இருந்து ரூ.1,000 திருட்டு போயிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.