கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தக்கலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
தக்கலை
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை, உண்ணாவிளையில் பாலகிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை என இருவேளைகள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்த பின் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் வழக்கமான பூஜைகள் செய்ய பூசாரி கோவிலுக்கு சென்றார். அப்போது, வெளிபுறத்தில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் மர்ம நபர் உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிவந்தது. உடனே, இதுபற்றி கோவில் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ேகாவில் கமிட்டித்தலைவர் மகேஷ் (வயது 39) தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.