கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
x

கோவில் உண்டியல்களை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்

உண்டியல்களை உடைத்து திருட்டு

பெரம்பலூர் பூசாரி தெருவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்னர், பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

இதைத்தொடர்ந்து அவர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த சில்வர் குடத்திலான 3 உண்டியல்கள் மற்றும் ஒரு உண்டியல் என 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், சில்லறை காசுகள் திருட்டு போயிருந்தது.

2 பேருக்கு வலைவீச்சு

ஆனால் கோவில் கருவறைகளில் இருந்த ஐம்பொன் சிலைகளான அம்மன், வீரபுத்திரர், கருப்பு சாமி ஆகிய சாமி சிலைகள் மற்றும் வெள்ளி வாள் ஒன்று மர்மநபர்கள் கண்ணில் படாததால், அவை தப்பின. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சுமார் 20 வயதிற்கு உட்பட்ட 2 பேர் வந்து சென்றது தெரியவந்தது.

எனவே அவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனா். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story