பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்
5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விமானத்தில் நேற்று மதுரை வந்தார்.
மதுரை வருகை
மதுரை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், மேயர் இந்திராணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின், அழகர் கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று நேற்று இரவு அங்கு தங்கினார்.
கனவு திட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது கனவு திட்டமான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்துகிறார். அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், காலை உணவை இனி பள்ளிகளில் சாப்பிடலாம்.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த திட்டம், முதல்கட்டமாக 26 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் பயிலும் 4 ஆயிரத்து 130 மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது. அதன்பின் நகராட்சி, ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை மதுரை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்துவதற்காக நெல்பேட்டை மற்றும் சிங்கராயர் காலனி மாநகராட்சி தொடக்க பள்ளிகள், சுப்பிரமணியபுரம் மாநகராட்சி தொடக்க பள்ளி ஆகிய 3 இடங்களில் சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கிருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் உணவு கொண்டு செல்லப்படுகிறது.
அண்ணா சிலைக்கு மரியாதை
இன்று காலையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னதாக நெல்பேட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதனை தொடர்ந்து நெல்பேட்டையில், காலை உணவு திட்டத்துக்கான சமையல் கூடத்தை பார்வையிட்டு, காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மதுரை விழாவுக்கு பின்னர் அவர் விருதுநகர் புறப்படுகிறார்..
முப்பெரும் விழா
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணாநகர் கலைஞர் திடலில் இன்று (வியாழக்கிழமை) மாலையில் தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பண முடிப்பு, நற்சான்று வழங்குகிறார்.
விழாவில் பெரியார் விருதை சம்பூர்ண சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும், கலைஞர் விருது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.க்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது விருதுநகர் மாவட்டம் குன்னூரை சேர்ந்த சீனிவாசனுக்கும் வழங்கி முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார்.
இதையடுத்து கருணாநிதி எழுதிய கடிதத்தொகுப்பு பற்றிய 54 புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ண ஓட்டங்கள் அடங்கிய 148 பக்கங்கள் கொண்ட 'திராவிட மாடல்' புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக்கொள்கிறார்.
நுழைவு வாயில்
விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு முகப்பாக பெரியார், அண்ணா, கருணாநிதி உருவங்களுடன் மலைமுகடு போன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பந்தல் நுழைவுவாயில் கோட்டை போன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.
பந்தலில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையிலும், விழாவினை 1 லட்சம் பேர் காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்பெரும் விழா ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அடிக்கல் நாட்டு விழா
முன்னதாக விருதுநகர் குமாரசாமிராஜா நகரில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் ரூ.74.57 கோடி மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
விருதுநகருக்கு வருகை தரும் முதல-அமைச்சருக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான கே.உசிலம்பட்டி, சத்திர ரெட்டியபட்டிவிலக்கு, போக்குவரத்து கழக பணிமனை, கலெக்டர் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட தி.மு.க. ஏற்பாடு செய்துள்ளளது.
முப்பெரும் விழா நடைபெறும் கலைஞர் திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். நகர் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.