காலை உணவு திட்டம்: பிள்ளையார் சுழி போட்டதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் - ஜெயக்குமார் பேட்டி


காலை உணவு திட்டம்: பிள்ளையார் சுழி போட்டதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் - ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2023 8:56 AM GMT (Updated: 30 Aug 2023 11:20 AM GMT)

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

இன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மறைந்த ஜி.கே.மூப்பனாரின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் மூப்பனார். 22 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது என்றால், தமிழகத்திற்கு அந்தளவுக்கு நல்லது செய்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசை நிர்பந்தித்து தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

தன்னுடைய குடும்ப சொத்தை, தஞ்சாவூர் ரெயில் பாதைக்கு கொடுத்தவர். அமைச்சர் பதவி வேண்டும் என்று தற்போது ஒரு சில கட்சிகள் இருக்கும் நிலையில், 3 பிரதமர்களை உருவாக்கும் வல்லமை படைத்து இருந்தவர் மூப்பனார். இவர் பிரதமராக வாய்ப்பு வந்தபோது திமுக அதனை தடுத்தது. ஆனால் இறுதி வரை திமுக மேல் குற்றம் சுமத்தாமல் இருந்தவர் மூப்பனார். அவருடைய வழியில் அவரது மகன் ஜி.கே.வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி வருகிறார் என்றார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே அதிமுக ஆட்சியில் தான். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதே இந்த திட்டம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என தெரிவித்தார். மேலும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்றார்.


Next Story