குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம்; அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
குழித்துறை,
குமரி மாவட்டத்தில் 333 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
மாதவலாயம் அரசு பள்ளி
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் மாதவலாயம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த தொடக்க விழாவுக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு அனைவரையும் வரவேற்றார்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மேயர் மகேஷ், மாதவலாயம் பஞ்சாயத்து தலைவர் ரெஜினா ராஜேஷ், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இ.என். சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் திட்ட இணை இயக்குனர் பீபீ ஜான் நன்றி கூறினார்.
திட்டத்தை தொடங்கி வைத்ததும் அமைச்சர், கலெக்டர், மேயர் ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்திற்குட்பட்ட 375 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்குட்பட்ட 42 அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் 3,994 மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மேலும் 333 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 ஆயிரத்து 343 மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள் என தெரிவித்தார்.
விஜய் வசந்த் எம்.பி.
இதேபோல் மார்த்தாண்டம் பகுதியில் குழித்துறை நகராட்சி மற்றும் உண்ணாமலைக்கடை, பாகோடு, களியக்காவிளை, நல்லூர் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 22 அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை உணவு தயாரிக்கப்பட்டு இந்த 22 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று காலை மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ராம திலகம், விளவங்கோடு தாசில்தார் குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலன், டாக்டர் பினுலால் சிங் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.