அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்


அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

விழுப்புரம் நகராட்சியில் 2-ம் கட்டமாக அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு அரசு நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் சி.பழனி கலந்துகொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக அவர் பேசியதாவது:-

ஆரோக்கியத்துடன் கூடிய கல்வி

தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய கல்வியை வழங்கிடும்பொருட்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை

தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் மாணவ- மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச்செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக இத்திட்டம் விழுப்புரம் நகராட்சியில் உள்ள 13 தொடக்கப்பள்ளிகளிலும், திண்டினம் நகராட்சியில் 6 தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1,857 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

3 பள்ளிகளில்...

இத்திட்டத்தை படிப்படியாக விரிவுப்படுத்திடும் நோக்கில் இரண்டாம் கட்டமாக தற்போது விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேடு அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 172 மாணவர்களுக்கும், வழுதரெட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 64 மாணவர்களுக்கும், காகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 69 மாணவர்கள் என மொத்தம் 305 மாணவ- மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் (நேற்று) சாலாமேடு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகரமன்ற கவுன்சிலர்கள் ஜனனி தங்கம், கோமதி பாஸ்கர், புருஷோத்தமன், சாந்தராஜ், பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story