பெரியார் சிலை உடைப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்


பெரியார் சிலை உடைப்பு; அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
x

பெரம்பலூரில் பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

பெரம்பலூர்

பெரியார் சிலை சேதம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பெரியார் சிலையின் இடது கை விரல்களில் கட்டை விரல் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் சிலையை சுற்றி சிவப்பு நிற சால்வை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அருகே இருந்த எம்.ஜி.ஆர். சிலையிலும் வெள்ளை நிற சட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. அண்ணா சிலை அருகே பேண்ட் ஒன்றும் கிடந்தது. இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் கட்சியினர் சிலைகளுக்கு முன்பு இரவில் கூடினர். பின்னர் அவர்கள் பொியார் சிலையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்து தூய்மைப்படுத்தினர். அதனை தொடர்ந்து பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.வினர் சிலைகளின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து, பெரியார் சிலையை சேதப்படுத்தி, அவமதித்த மர்ம ஆசாமிகளை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான போலீசார் அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தி, அவமதித்த நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மது போதையில் யாராவது இந்த செயலில் ஈடுபட்டு சென்றனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஒருவரை சந்தேகத்தின் பேரிலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிலைகளின் முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலை சேதப்படுத்திய சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story