பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
x

திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை-பணம் திருட்டு

திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகர் ஆபிஸர் டவுன் பகுதியை சேர்ந்தவர் சேவியர் லாரன்ஸ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கிய ராணி (வயது 36). சம்பவத்தன்று காலையில் இவர் வீட்டை பூட்டிவிட்டு திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

பின்னர் திரும்பி வந்த அவர் வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது, பீரோ திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கிய ராணி வீட்டின் பின்பக்க கதவை பார்த்தபோது, கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம், 3 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொத்தனார் சாவு

*காட்டுப்புத்தூர் அருகே உள்ள ஏலூர்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னம்பலம் (46). கொத்தனாரான இவர் வேந்தன்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

*திருச்சி மதுரை ரோடு வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (33). ஆட்டோ டிரைவரான இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000 பறித்து சென்ற ஸ்ரீரங்கம் தாலுகா குழுமணி அருகே உள்ள பேரூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்கிற ஆட்டோ சக்தி (35), மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஆட்டோ பாலு (37), சிந்தாமணி புது தெருவை சேர்ந்த தினேஷ் என்கிற தினேஷ் குமார் (23) ஆகிய 3 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் முகில்குமாரை தேடி வருகின்றனர்.

கஞ்சா, லாட்டரி விற்பனை

*திருச்சி எடமலைப்பட்டி புதூர், ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 670 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், உறையூர் பகுதிகளில் லாட்டரி விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி விமான நிலையம், தில்லை நகர் பகுதிகளில் சூதாட்டம் நடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பணம், துண்டு சீட்டில் எழுதிய லாட்டரி எண்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசாரின் அதிரடி வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூக்கில் வாலிபர் பிணம்

*திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் நந்திகோவில் தெருவில் இருந்து வாணப்பட்டறை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் தெப்பக்குளத்தை ஒட்டிய பகுதியில் உள்ள ஒரு பாத்திரக்கடையின் ஷட்டர் கொக்கியில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story