வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடிச்சென்று விட்டனர்.
குடியாத்தம் அடுத்த கல்மடுகு கிராமம் அண்ணாதெருவை சேர்ந்தவர் சந்தியா (வயது 30). இவரது கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து சந்தியா தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியாவின் தாயார் இறந்து விட்டார். இதனால் தினமும் மாலையில் வீட்டை பூட்டிக்கொண்டு அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று தந்தை வெங்கடேசனுக்கு சமையல் செய்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு, காலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
அதில் வைத்திருந்த இரண்டு பவுன் நகை, பணம் ரூ.10 ஆயிரம், எல்.இ.டி. டி.வி., மீன் தொட்டி, பூஜை அறையில் இருந்த விநாயகர் சிலை மற்றும் பொம்மைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சந்தியா குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.