வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் சாலாமேடு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் அலாவுதீன் (வயது 67). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உம்ரா புனித பயணம் சென்றுள்ளார். கடந்த ஒரு வாரமாக இவருடைய வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகையை திருடிச்சென்று விட்டனர். இதேபோல் விழுப்புரம் சாலாமேடு லட்சுமி நகர் திரு.வி.க. தெருவை சேர்ந்த ராஜகோபாலன் (74) மற்றும் சாலாமேடு காமராஜர் தெருவை சேர்ந்த சங்கரின் மனைவி கொளஞ்சியம்மாள் (42) என்பவரின் வீட்டுக்குள்ளேயும் மர்மநபர்கள் உள்ளே புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்துடன் சென்றது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.