கரைந்து வரும் செங்கல் சூளை தொழில் நிவாரணம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை


கரைந்து வரும் செங்கல் சூளை தொழில்  நிவாரணம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கரைந்து வரும் செங்கல் சூளை தொழில் நிவாரணம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை

நாமக்கல்

ராசிபுரம்:

கரைந்து வரும் செங்கல் சூளை தொழிலால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிவாரணம் வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல் சூளைகள்

சிறிய கட்டிடங்கள், பெரிய கட்டிடங்கள், மாட மாளிகை, கோவில்கள் போன்ற எந்தவொரு கட்டிடமும் கட்டுவதற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது செங்கல். தற்போது 'ஹாலோ பிரிக்ஸ்' கற்கள் பயன்பாட்டுக்கு வந்து வர்த்தக ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தாலும் செங்கலின் பயன்பாடும், மவுசும் இன்னமும் குறையாமல் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

ஒரு செங்கல் சூளை அமைக்க 1 ஏக்கர் பரப்பளவுக்கு இடம் தேவை. சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஓமலூர், மேச்சேரி, மல்லூர், அத்தனூர், கிழக்குவலசு, குருசாமிபாளையம், வடுகம், சங்ககிரி, திருச்செங்கோடு, காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, குமாரபாளையம், அரூர், தொப்பூர் உள்பட பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

60 ஆயிரம் பேருக்கு வேலை

இந்த தொழிலில் மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஏறக்குறைய 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மாதந்தோறும் சுமார் 1 கோடி அளவுக்கு செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் நல்ல தரமான மண் கொண்டு தயாரிக்கப்படுவதால் செங்கலின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது. ஒரு செங்கல் ரூ.7 முதல் ரூ.8-க்கு விற்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் கோவை மாவட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கலை விட தரமானதாக இருப்பதாலும், விலை சற்று குறைந்து விற்கப்படுவதாலும் திருப்பூர், திருச்சி, அரியலூர், சென்னை, ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு வாங்கி செல்கின்றனர்.

ஒரு செங்கல் சூளை அமைக்க ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. செங்கல் தயாரிக்க பயன்படும் மண்ணை சுமார் 40 கி.மீட்டர் தூரம் வரை சென்று வாங்கி வருகின்றனர். 1 யூனிட் மண் சுமார் ரூ.2,500-க்கு வாங்கி வருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். செங்கல் சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 6, 7 மாதங்கள் மட்டும் தான் வேலையும், வருமானமும் கிடைக்கிறது. அதேபோல் உரிமையாளர்களுக்கும் அதே நிலைதான். மழை இல்லாத காலங்களில் தான் செங்கல் உற்பத்தியும், விற்பனையும் நடக்கிறது.

நிதிஉதவி

ஆனால் மழைக்காலங்களில் செங்கல் உற்பத்தி பாதிப்படைவதுடன் அதனை நடத்தும் உரிமையாளர்களும் வருமானம் இன்றி இருக்கும் நிலை உள்ளது. ஏனெனில் மழைக்காலங்களில் உற்பத்தி செய்து வைக்கப்படும் செங்கல் மழையால் நனைந்து விடுகிறது. மீண்டும் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோல் செங்கல் உற்பத்திக்கு சேகரித்து வைக்கப்படும் மண் மழைநீரில் கரைந்து போய் விடுகிறது.

எனவே மழைக்காலங்களில் வேலையின்றி வருமானத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு நிதிஉதவி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முன் வரவேண்டும். அதேபோல் வருமானமின்றி தொழிற்சாலையை தொடர்ந்து நடத்த முடியாமல் தவிக்கும் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கும் மானியம் அல்லது நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும். மேலும் செங்கல் தயாரிக்க பயன்படும் விறகு, மண் போன்றவற்றை குறைந்த விலையில் கிடைக்க செய்ய வேண்டும் என்பதே செங்கல் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

நஷ்டஈடு வழங்க வேண்டும்

செங்கல் சூளை உரிமையாளர் ஏ.வி.தங்கவேலு:

செங்கல் உற்பத்தி செய்வது ஒரு குடிசை தொழில். செங்கல் மண்ணால் உற்பத்தி செய்யப்படுவதால் நாட்டு சூளையில் தயாரிக்கப்பட்ட செங்கல் தரமாகவும், உறுதியாகவும் உள்ளது. முந்தைய காலத்தில் செங்கல் உற்பத்தி செய்ய மண் வாங்கி வரவும், செங்கல் சூளையை நடத்தவும் அரசு லைசென்ஸ் வழங்கி வந்தது. தற்போது மண் அள்ளி வர லைசென்ஸ் வழங்கப்படுவதில்லை. எனவே அதற்கான லைசென்சை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த விலையில் மண் வழங்க வேண்டும். பெரும்பாலான செங்கல் சூளைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குவதில்லை. வாடகை நிலத்தில் தான் பெரும்பாலான சூளைகள் உள்ளன. வாடகை இடத்தில் செங்கல் சூளை நடத்தி வருவதால் அரசு கேட்கும் ஆவணங்களை எங்களால் தரமுடிவதில்லை. இதனால் அரசிடம் இருந்து எந்தவிதமான சலுகையும் எங்களால் பெற முடியாமல் போய்விடுகிறது.

மழைக்காலங்களில் தொழில் நடத்த முடிவதில்லை. தற்போது 'பிளை ஆஸ் பிரிக்ஸ்' கற்கள் போட்டிக்கு வந்துவிட்டதால் தொழிலில் கடுமையான போட்டி நிலவுகிறது. மழைக்காலங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு அரசு நிதிஉதவி வழங்க முன் வரவேண்டும். சூளை நடத்துபவர்களுக்கும் மழையினால் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே சூளை உரிமையாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

புகை கூண்டு

வடுகத்தை சேர்ந்த செங்கல் தயாரிப்பாளர் முருகேசன்;- செங்கல் தயாரிக்கவும், மண் கலக்கவும் எந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த எந்திரங்கள் வாங்க அரசு மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நிலத்தை உழவு செய்ய மானியம் வழங்கப்படுவதை போல் செங்கல் சூளைக்கு மண் அள்ள பயன்படுத்தப்படும் பொக்லைன் எந்திரத்தின் வாடகைக்கு மானியம் வழங்க வேண்டும்.

மழைக்காலங்களில் மத்திய, மாநில அரசுகள் அமைப்பு சாரா தொழிலாளர்கள் வாரியத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுவரை அமைப்புசாரா வாரியத்தில் உறுப்பினர் ஆகாமல் இருக்கும் செங்கல் சூளை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் செங்கல் சூளை அதிக அளவில் செயல்படும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தி உறுப்பினராக சேராதவர்களை அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்போதுதான் அரசின் பல்வேறு சலுகைளை பெற முடியும்.

செங்கல் தயாரிக்க பயன்படும் மண், விறகு போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகம். இதனால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. விற்பனை விலையும் அதிகரிக்க செய்கிறது. எனவே குறைந்த விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தின் மூலம் மழை கோட்டு, தலைக்கவசம் உள்பட பாதுகாப்பு உபகரணங்களையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும். செங்கல் சூளையில் இருந்து வெளிப்படும் புகையால் காற்று மாசுபடாமல் இருக்க செங்கல் சூளையில் பயன்படுத்த புகை கூண்டை இலவசமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்


Next Story