பராமரிப்பில்லாத அமராவதி ஆற்றுப்பாலம்
மடத்துக்குளம் அருகே பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதால் அமராவதி ஆற்றுப்பாலத்தில் மரங்கள் முளைத்து வீணாகி வருகிறது.
மடத்துக்குளம் அருகே பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுவதால் அமராவதி ஆற்றுப்பாலத்தில் மரங்கள் முளைத்து வீணாகி வருகிறது.
மாவட்ட எல்லை
திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக் கோடாக மடத்துக்குளம் பகுதியில் அமராவதி ஆறு பாய்கிறது. இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமராவதி ஆற்றின் மீது உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. தினசரி ஏராளமான கனரக வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தின் மீது பயணம் செய்கின்றன.
ஆனால் பாலம் முறையாக பராமரிக்கப்படாததால் அதன் உறுதித் தன்மையை இழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
'மிக முக்கிய வழித்தடமாக உள்ள இந்த பாலம் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால் பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக நடந்து செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
உறுதித்தன்மை
பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபுறமும் புற்கள் முளைத்து காணப்படுகிறது. அத்துடன் பக்கவாட்டில் ஆங்காங்கே ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட மரங்கள் முளைத்து நன்கு செழித்து வளர்ந்து வருகிறது. இந்த மரங்களின் வேர்கள் பாலத்தை துளைத்து செல்வதால் ஆங்காங்கே வெடிப்புகள் உருவாகிறது. அந்த வெடிப்புகளில் மழைநீர் செல்லும்போது பாலத்தின் உறுதித்தன்மைக்காக உள்ளே பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் துருப் பிடிக்கும் நிலை உள்ளது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உடைந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே குறிப்பிட்ட இடைவெளியில் பாலத்தை பராமரிக்கவும் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்துக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு தீவைத்து கொளுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மண்டலம் காரணமாக ஏற்கனவே குறுகலான பாலத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு காரணமாகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும், அவை தீவைத்து கொளுத்தப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.