வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரம்


வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரம்
x

வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரம்

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடபாதிமங்கலத்தில் பாலம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பணிகள் நிறுத்தம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிளியனூர்-புனவாசல் இணைப்பு பாலம் பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் அந்த குறுகலான பாலத்தை அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்துடன் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் அந்த பாலம் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்தது.

இதனால் அந்த பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த பாலத்தை அகற்றினர். பின்னர் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

பாலம் கட்டும் பணிகள் மும்முரம்

இதனால் பழைய பாலம் இடிக்கப்பட்டதாலும், புதிய பாலம் கட்டாமல் போனதாலும் கிளியனூர், வடபாதிமங்கலம், புனவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வெண்ணாற்றை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இந்தநிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மூடப்பட்டதால் நிறுத்தப்பட்ட பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

கடந்த 24-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இந்த பாலத்தை வந்தடைந்தது. பாலத்தின் நடைபாதை தளம் வரை அமைக்கப்பட்டு பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதால் கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி ெதரிவித்தனர்.

--



Next Story