கோட்டையூர்-ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும்கண்காணிப்பு குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. அறிவுறுத்தல்


கோட்டையூர்-ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஆய்வு பணிகளை தொடங்க வேண்டும்கண்காணிப்பு குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. அறிவுறுத்தல்
x
தர்மபுரி

தர்மபுரி

கோட்டையூர்-ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. அறிவுறுத்தினார்

கண்காணிப்பு குழு கூட்டம்

தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி வரவேற்றார். கூட்டத்தில் கண்காணிப்பு குழு தலைவர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு முதல் -அமைச்சர் தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

பாலம் அமைக்கும் பணி

தர்மபுரி- சேலம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் கோட்டையூர்-ஒட்டனூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகளை அதிகாரிகள் தொடங்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. எனவே பெரிய தொழில் நிறுவனங்களை அணுகி சமூக பொறுப்புணர்வு நிதியை பெற்று அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த தேவையான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. பேசுகையில், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குறைவான பயனாளிகளே பயனடைந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ளவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இவற்றை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story