திருமணிமுத்தாற்றில் பாலம் கட்டும் பணி-ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு


திருமணிமுத்தாற்றில் பாலம் கட்டும் பணி-ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
x

சேலம் திருமணிமுத்தாற்றில் பாலம் கட்டும் பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

சேலம்

பாலம் கட்டும் பணி

சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன்படி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பழைய பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.96 கோடியே 53 லட்சத்தில் நடைபெற்று வரும் 2 அடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் திருமணிமுத்தாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது பணியின் முன்னேற்றம் குறித்தும், முழுமையாக பணிகள் முடிவுறும் நிலை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அடிப்படை வசதிகள்

தாதகாப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய அவர் அங்கு அடிப்படை வசதிகளான ஓய்வு அறை, படுக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கட்டிட வசதி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் பாதயை விரிவு படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.27 கோடியில் சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி ஏரியை புனரமைத்து அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியையும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story