பக்தர்களை பாடையில் சுமந்து வந்து வினோத நேர்த்திக்கடன்


பக்தர்களை பாடையில் சுமந்து வந்து வினோத நேர்த்திக்கடன்
x

அருள்மொழி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களை பாடையில் சுமந்து வந்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

அரியலூர்

திருவிழா

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அருள்மொழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் சித்திரை மாத கோடை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி திருவிழா நேற்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காவிரி தாயை வணங்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு பால்குடம், பால்காவடி, அலகு காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொள்ளிட ஆற்றில் தொடங்கிய பால்குடம் ஊர்வலம் முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கோவிலை சென்றடைந்தது. இதனை அடுத்து அப்பகுதி பக்தர்களின் நேர்த்திக்கடனில் பாரம்பரியமான வினோத நேர்த்திக்கடனான ஆடை காவடி ஊர்வலம் நடைபெற்றது.

பக்தர்களை பாடையில்...

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பக்தர்கள் அருள்மொழி மாரியம்மனுக்கு தனது உயிரை காப்பாற்றினால் பாடை காவடி எடுத்து வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டு அதனை நிறைவேற்றும் வகையில் நடைபெறும் இந்த சம்பிரதாயம் இந்த கோவிலில் மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

அருள்மொழி அய்யன் ஏரி கரையிலிருந்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிய பக்தர்களை பாடை காவடியில் படுக்க வைத்து மரணம் அடைந்தவர்களை இறுதிச்சடங்குக்கு தூக்கிச் செல்வது போல் கோவிலை நோக்கி தூக்கி சென்று கோவில் பிரகாரத்தை வலம் வந்து கோவிலுக்குள் சென்று அம்மன் முன் இறக்கி வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.


Next Story