பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நாமக்கல்லில் வரதராஜ பெருமாள் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெருமாள் கோவில்
நாமக்கல் ராமாபுரம்புதூர் செம்பாளி பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினமும் காலையும், மாலையும் பூஜை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்து விட்டு கோவில் உண்டியலை அங்குள்ள ஒரு அறையில் வதை்து பூட்டி விட்டு சென்றனர்.
நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் வைக்கப்பட்டு இருந்த அறை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலை காணவில்லை. கோவிலை சுற்றி பார்த்தபோது கருவறைக்கு பின்னால் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார், கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டனர்.
பணம் திருட்டு
அப்போது அதிகாலையில் மர்மநபர் ஒருவர் கோவிலின் பின்புற சுற்றுச்சுவர் வழியாக ஏறி கோவிலுக்குள் வருவதும், உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்வதும் தெரியவந்தது. இதில் ரூ.8 ஆயிரம் பணம் இருந்து இருக்கலாம் என கோவில் நிர்வாகிகள் கூறினர்.
வெண்கல சிலைகள் இருந்த கருவறையையும் மர்மநபர் பூட்டை உடைத்து உள்ளார். ஆனால் சிலைகள், குத்து விளக்கு என வேறு எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று உண்டியலில் உள்ள பணம் திருட்டு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.