வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x

மணப்பாறை அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

மணப்பாறை அருகே வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இறைச்சி வியாபாரி

மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டி நேருஜி நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 55). இவர் இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது. இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

*ஸ்ரீரங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி லீலாவதி (36). நேற்று முன்தினம் அதிகாலை குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது, சங்கர் எழுந்து கதவை திறந்து கழிவறைக்கு சென்றார். இதை நோட்ட மிட்ட ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து செல்போன் மற்றும் ஹோம்தியேட்டரை திருடிக்கொண்டு சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (19) என்ற வாலிபரை கைது செய்து, அவரிடம் இருந்து திருட்டு போன பொருட்களை மீட்டனர்.

வாலிபர் மாயம்

*ஸ்ரீராமசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (54). இவரது மகன் காளிதாஸ் (19). வாத்து வியாபாரம் செய்து வந்த இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து சென்றார். அதன் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story