குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


திருக்கண்ணபுரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் உடைப்பு

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பூமிக்கு அடியில் பாதிக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் மூலம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி சாலையில் ஓடி வீணாகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story