குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
கட்டுமாவடியில் குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
கட்டுமாவடியில் குழாய் உடைந்து சாலையில் வீணாக குடிநீர் செல்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாய் உடைந்தது
நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-நன்னிலம் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குழாய் மூலம் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கட்டுமாவடியில் திட்டச்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
வீணாகும் குடிநீர்
இதன்காரணமாக குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையில் ஓடு வீணாகி வருகிறது. இந்த உடைப்பு இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் சாலைகளில் குடிநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.
சரி செய்ய வேண்டும்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் - நன்னிலம் மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.