பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகள்


பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகள்
x

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

கோயம்புத்தூர்

நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பஸ் நிறுத்தங்களில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

பயணிகள் இருக்கைகள்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் அனைத்து பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்கு அந்தந்த ஊராட்சி சார்பில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு ஊராட்சியில் இருக்கைகள் இருப்பதே தெரிவதில்லை. சில ஊராட்சியில் இருக்கைகள் போடப்பட்டு, சில நாட்களிலேயே சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அங்கு இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல ஊராட்சியில் இருக்கைகள் இருந்தும் பயனில்லாமல் உள்ளது.

சேதமடைந்து கிடக்கிறது

இந்தநிலையில் செட்டியக்காபாளையம், வடக்கு காடு, குருநல்லிபாளையம், ஆண்டிபாளையம், தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், சிறுக்களந்தை, வடசித்தூர் மற்றும் பல்வேறு ஊராட்சியில் இருக்கைகள் சேதமடைந்து பயணிகள் அமரும் நிலையில் இல்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

ஒன்றிய அதிகாரிகள் பெயரளவில் மட்டும் ஊராட்சிகளுக்கு சென்று ஆய்வு நடத்துகிறார்கள். அதுவும் அலுவலகத்தில் மட்டும் அமர்ந்து பதிவேடுகளை சரிபார்த்து செல்கின்றனர்.

மாற்ற வேண்டும்

அவர்கள் அந்தந்த ஊராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் பார்வையிட்டு தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, பஸ் நிறுத்தங்களில் போடப்பட்டுள்ள பயணிகள் இருக்கைகள் வசதி மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் ஏனோ, தானோ என்று பெயரளவில் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இல்லையென்றால் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்துகின்றனர். அப்போது ஊராட்சியில் உள்ள நிலைமையை எடுத்து கூறினாலும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி பகுதிகளுக்கு நேரடியாக சென்று, இதுபோல் உடைந்துள்ள இருக்கைகளை கண்டறிந்து உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story