அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது


அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 1 May 2023 6:46 PM GMT)

ஊட்டி அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

சொத்து தகராறு

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த நஞ்சநாடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 70). இவர் குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய தம்பி சிவக்குமார் (55). இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரிப்பதில் அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரேம்குமார் குடும்பத்தினருக்கு சிவக்குமார் அழைப்பு விடுத்தார். ஆனால், பிரேம்குமார் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்தநிலையில் சிவக்குமார் நேற்று பிரேம்குமார் வீட்டுக்கு சென்று, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் அருகில் கிடந்த கோடாரியை எடுத்து பிரேம்குமாரை தலையில் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த பிரேம்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பிரேம்குமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் மற்றும் போலீசார் சிவக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தற்கொலை முயற்சி

இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அண்ணனை கொன்றதால் மனவேதனை அடைந்த சிவக்குமார் நஞ்சநாட்டில் இருந்து ஊட்டிக்கு வரும் வழியில் போர்த்திஹாடா அணை பகுதியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story