வட்டிப்பணம் தராததால் தம்பியின் காதை வெட்டிய அண்ணன் கைது
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வட்டிப்பணம் தராத தம்பியின் காதை அண்ணன் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலாப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலவன்(வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் நாகப்பன்(50) என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் அதனை வேலவன், நாகப்பனிடம் திரும்ப கொடுத்துள்ளார். இதனிடையே நாகப்பன், கொடுத்த கடனுக்கு வட்டிப்பணம் தர வேண்டும் என்று வேலவனிடம் அடிக்கடி கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வேலவன் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகப்பன், அவரை வழிமறித்து வட்டிப் பணத்தை கேட்டு திடீரென கத்தியால் வெட்டினார். இதில் வேலவனின் இடது காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பனை கைது செய்தனர்.