ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ரேஷன் அரிசி
மயிலாடுதுறை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் கஞ்சாநகரம்- மேலையூர் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில் அந்த சரக்கு ஆட்டோவில் ஒரு டன் அளவில் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
2 பேர் கைது
இதனையடுத்து ரேஷன் அரிசியுடன் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள், தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின்ரோட்டை சேர்ந்த சேகர் மகன் சத்தியசீலன் (வயது 33) என்பதும், அந்த சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவர் இவரது தம்பி பிரசாந்த்(30) என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்தே ரேஷ்ன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி பூம்புகார் பகுதியில் பொதுமக்களிடம் வாங்கியவை என்றும், அதனை நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணையில் விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சத்தியசீலன், பிரசாந்த் ஆகிய 2 பேரையும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் 2 பேரையும் நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.