மரவள்ளி பயிரை தாக்கி வரும் பழுப்பு நோய்


மரவள்ளி பயிரை தாக்கி வரும் பழுப்பு நோய்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு மற்றும் கல்வராயன்மலைப்பகுதிகளில் மரவள்ளி பயிரை பழுப்பு நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மரவள்ளி பயிர்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் ஒரு ஆண்டு பயிர்களான கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

அந்த வகையில் அரும்பராம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, வட மாமாந்தூர், மங்கலம், சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, புளியங்கோட்டை, ஆணைமடுவு, மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மரவள்ளி பயிரை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது 3 முதல் 4 அடி உயரம் வளர்ந்த நிலையில் மரவள்ளி செடியில் அதிக அளவில் பழுப்பு நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மரவள்ளி செடியில் இலையின் மேல்பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் இந்த நோய் தாக்குவதால் செடியின் வளர்ச்சியும் மிகவும் குறைவாகவே காணப்படுவதோடு இலைகளும் அவ்வப்போது உதிர்ந்து விடுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஆலோசனை வழங்க வேண்டும்

பெரும்பாலும் இப்பகுதிகளில் கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்த நிலையில் கிழங்கு வகை பயிர்களாக இருக்கும் மரவள்ளியை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நூற்றுக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளியை சாகுபடி செய்தோம். ஆனால் மரவள்ளி பயிரில் இலைகள் முழுவதும் காய்ந்த நிலையிலும், சில பகுதிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திலும் காணப்படுகிறது.

இதை கட்டுப்படுத்த பல்வேறு வகையான மருந்துகளை தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் இப்பகுதிகளில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. பல ஆயிரம் செலவு செய்து பயிர் சாகுபடி செய்து வந்த நிலையில் மரவள்ளி பயிரின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதை பார்க்கும்போது செலவு செய்த அசல் தொகையாவது கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் நோயால் பாதிக்கப்பட்ட மரவள்ளி பயிரை நேரில் ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story