கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம்


கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம்
x

கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நாளை தொடங்குகிறது.

அரியலூர்

புரூசெல்லோசிஸ் என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபார்டஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. மேலும் இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு ஜூனோடிக் நோயாகும். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக முதன் முறையாக புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒருமுறை செலுத்தி கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும். இந்த தடுப்பூசி திட்டமானது ஒவ்வொரு 4 மாதங்களுக்கு ஒரு முறை, 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட உள்ளது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடாது. ஆகவே 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story