குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
x

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என பட்ஜெட் குறித்து நாமக்கல் மாவட்ட பெண்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்

தி.மு.க. தேர்தல் அறிக்கை

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1,000 உதவித்தொகை உள்பட மகளிர் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.

பின்னர் மகளிருக்கு அரசு டவுன் பஸ்சில் செல்ல இலவசம் உள்பட மகளிர் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக அரசு பஸ்சில் மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பால் வேலைக்கு செல்லும் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கியது பெண்களிடையே வரவேற்பை பெற்றது.

மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை

இந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்த குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வந்தனர். அத்துடன் இது தொடர்பாக குடும்ப தலைவிகளும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்தார்.

பெண்கள் கருத்து

மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் குறித்து வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், வரவேற்று உள்ளன. அத்துடன் குடும்ப தலைவிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுதவிர கோவையில் ரூ.9 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா, இலவச வை-பை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த பட்ஜெட் குறித்த கருத்துகளை நாமக்கல் மாவட்டத்தில் இலத்தரசிகள், பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டபேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்த கருத்துகளை நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறியதாவது:-

பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த வணிகர்களுக்கு தமிழக பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. வணிகர்களுக்கான புதிய சலுகைகள் எதுவும் வழங்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நலிந்த வணிகர்களுக்கும், புதிய தொழில் முனைவோருக்கும் குறிப்பிட்டு சொல்லும்படி எவ்வித அறிவிப்பும் இல்லை.

அதேசமயம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும், தமிழகத்தில் குளங்கள், ஊரணிகளை புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கதக்கது. விவசாய கடன், நகைக்கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி வரவேற்கதக்கது. இதுபோலவே கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட உள்ளாட்சி மற்றும் நகராட்சி கடை வியாபாரிகளுக்கான வாடகை தள்ளுபடியை, அரசு இந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தால் ஆயிரக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டிருக்கும். பலமடங்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியினை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பட்ஜெட்டை பெரிதும் வரவேற்று இருப்பார்கள்.

வருவாய் பற்றாக்குறை குறைப்பு

ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) பொருளாதாரதுறை உதவி பேராசிரியர் கார்த்திகை செல்வம்:-

இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36 ஆயிரத்து 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அரசு பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும். புதிதாக அரசு பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட ரூ.13 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்துக்கு ரூ.8,008 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அரசு பள்ளி மாணவர்களை ஐ.ஐ.டி., எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் இளங்கலை கல்விக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பதும் பாராட்டுக்கு உரியது. கடந்த 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் நிதி பற்றாக்குறை 4.33 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

வரவேற்கத்தக்கது

திருச்செங்கோட்டை சேர்ந்த இல்லத்தரசி ஜீவிதா முத்துக்குமார்:-

பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், இதற்காக முதல்கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் வழங்கினால், பெண்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

இதேபோல் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிற அறிவிப்பால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடியும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

ஊழல் தடுப்பு

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்க மாநில பொதுச்செயலாளர் மதியழகன்:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் சுமார் 25 முதல் 35 வரையிலான போலீசார் தான் உள்ளனர். ஊழல் தடுப்பு துறையில் குறைந்தது மாவட்டத்திற்கு 200 போலீசாராவது பணிபுரிந்தால் மட்டுமே அந்தந்த மாவட்டங்களில் ஊழலை தடுக்க மற்றும் கண்காணிக்க முடியும். எனவே தமிழக அரசு கவனம் செலுத்தி ஊழலை தடுப்பதற்காக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு அதிக அளவில் அதிநவீன கருவிகளையும், போதிய போலீசாரையும் நியமிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையினை அதிகரிக்க வேண்டும். அதாவது சாதாரணமான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடினமாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஒதுக்க வேண்டும். அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இதற்கு தேவையான நிதியினை தமிழக அரசு வரும் ஆண்டிலாவது ஒதுக்க முயற்சிக்க வேண்டும்.

மகளிர் குழுக்களுக்கு கடன்

எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி கஸ்தூரி:-

பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் 10,000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்கு உரியது. அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story