பட்ஜெட் நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


பட்ஜெட் நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக பட்ஜெட் அறிவிப்பு உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பட்ஜெட் நமது அரசின் கனவு.. நாளை முதல் அது நனவாக வேண்டும்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது.

ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசானது 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம்.

குடிசை இல்லாத் தமிழ்நாடு, வறுமை ஒழிப்பு, பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் -மாணவர்களுக்கு கல்விக் கடன், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் -நீர்நிலைப் பாதுகாப்பு, கணினிமயமாக்கம், சாலைகள், குடிநீர்வசதிகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்பு, தொல்லியல் விண்வெளி என அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.

இந்த அறிக்கையின் மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு சொல்லும் எழுத்தும் அறிவிப்பும் ஈரமுள்ளதாக, இதயமுள்ளதாக இருக்கிறது என்பதுதான். "ஆடுகளை ஓட்டிக்கொண்டு வரும் ஒரு விவசாயி. ஒரே ஒரு ஆட்டை மட்டும் தோளில் தூக்கிப் போட்டு சுமந்து வருவான். அது காலில் அடிபட்டு நடக்க முடியாத ஆடாக இருக்கும். அதற்குப் பெயர்தான் சமூகநீதி" - என்று சொன்னவர் கருணாநிதி அந்த அடிப்படையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் அறிவிப்பு அமைந்துள்ளது.

நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளோம். தலைசிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட கனிவான பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன்.

திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, "இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும். ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்" என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story