கட்டிட காண்டிராக்டர் காரில் கடத்தல்; பெண் உள்பட 4 பேர் கைது


கட்டிட காண்டிராக்டர் காரில் கடத்தல்; பெண் உள்பட 4 பேர் கைது
x

ஏர்வாடியில் கட்டிட காண்டிராக்டரை காரில் கடத்தியதாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடியில் கட்டிட காண்டிராக்டரை காரில் கடத்தியதாக பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டிட காண்டிராக்டர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி பொத்தையடி சத்திரிய நாடார் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் வேல்முருகன் (வயது 30). கட்டிட காண்டிராக்டரான இவர் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் நடுத்தெருவை சேர்ந்த இளங்கோவன் மனைவி தனலெட்சுமியின் (55) உறவினரான மீனாட்சிக்கு புதுக்கோட்டையில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

இந்த பணிக்காக வேல்முருகன் வாங்கிய பணத்தில் மீனாட்சிக்கு திருப்பி கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனலெட்சுமி, வேல்முருகனிடம் பணத்தை கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

காரில் கடத்தல்

இந்த நிலையில் நேற்று வேல்முருகன் பொத்தையடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த தனலெட்சுமி, பொன்சேகர் மகன் சுபாகர் (31) உள்பட 4 பேர் சேர்ந்து வேல்முருகனை இரும்பு கம்பியால் தாக்கி காரில் இழுத்து போட்டு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த வேல்முருகனின் சகோதரர் முத்துக்குட்டிக்கும் (35) கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி உடனடியாக வேல்முருகனை மீட்டனர்.

4 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனலெட்சுமி, சுபாகர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஏர்வாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story