ராசிபுரம் அருகேஇறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி


ராசிபுரம் அருகேஇறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:45 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி புதுத்தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை மாடு ஒன்று ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த கோவில் காளையை அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவர் பராமரித்து வந்தார்.

25 ஆண்டுகளாக கோவில் காளையை அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர். திருவிழா காலங்களில் கோவில் காளைக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்தது

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வயது முதிர்வு காரணமாக நோய் வாய்ப்பட்டு இருந்த கோவில் காளை நேற்று உயிரிழந்தது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் கோவில் காளைக்கு மாலை, வேட்டி, துண்டு அணிவித்தும் சந்தனம், ஜவ்வாது, பூசி தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

மேலும் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் கோவில் காளையை கோவில் அருகே அடக்கம் செய்தனர். கோவில் காளை இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story