மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

அரிமளம், அறந்தாங்கியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

அரிமளம் அருகே ஓணாங்குடி வேணுகோபால் சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 76 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 12 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை ராமநாதபுரம் வெள்ளையபுரம் அஜ்மல் கான், 2-ம் பரிசு ஓணாங்குடி பொன்னழகி அம்மன், 3-ம் பரிசு ஏரியூர் பெத்தாச்சி, 4-ம் பரிசு திருவாப்பாடி மணி முத்து ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

பரிசு

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் பந்தய தூரமானது 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 17 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியாக நடந்த சிறிய மாடு பிரிவில் பந்தய தூரம் 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 47 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த பிரிவில் அதிகளவு வண்டிகள் கலந்து கொண்டதால் பாதுகாப்பு கருதி பந்தயம் 2 பிரிவாக நடத்தப்பட்டது.

தொடர்ந்து பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற அரிமளம்- புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே குன்னக்குரும்பி கிராமத்தில் ராதா சமேத கிருஷ்ணர் பரமாத்மா கோவில் 2-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 60 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது. இதில் முதல் 3 இ்டங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாட்டு வண்டிகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு வழங்கப்பட்டது.


Next Story