சிவகங்கை அருகே மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
சிவகங்கை அருகே சக்கந்தி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் புதுப்பட்டி-மேலூர் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 53 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம், தேன் சிட்டு வண்டி பந்தயம் என 5 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 5 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை குப்பச்சிபட்டி வைரம் மற்றும் அரும்பனூர் ரமேஷ் வண்டியும், 2-வது பரிசை பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாத்தேவர் வண்டி, ஜெமினிபட்டி ஆனந்த் வண்டியும், 3-வது பரிசை கணக்கன்பட்டி சற்குரு வண்டியும் பெற்றது.
நடுமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அதிகரை வேங்கை வண்டியும், 2-வது பரிசை கொட்டக்குடி பாலுச்சாமி மற்றும் இளங்கிப்பட்டி போஸ் வண்டியும், 3-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் மற்றும் மானாமதுரை யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி வண்டியும் பெற்றது.
பூஞ்சிட்டு பந்தயம்
சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அதிகாரை வேங்கை வண்டியும், 2-வது பரிசை பாசாங்கரை பத்திரகாளி மற்றும் கள்ளந்திரி நிரஞ்சன் வண்டியும், 3-வது பரிசை பாண்டிகோவில் பாண்டிசுவாமி வண்டியும் பெற்றது.
பூஞ்சிட்டு வண்டி பந்தயத்தில் 20 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை மேலூர் டைம்பாஸ் டீ ஸ்டால் வண்டியும், 2-வது பரிசை சிறப்பாறை வெண்டி முத்தையா வண்டியும், 3-வது பரிசை பல்லவராயன்பட்டி இளமாறன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற தேன்சிட்டு வண்டி பந்தயத்தில் 11 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை என்.டி.பட்டி ராம்சரண் வண்டியும், 2-வது பரிசை புதுப்பட்டி காவல்துறை வண்டியும், 3-வது பரிசை அதிகரை வேங்கை சேர்வை வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.