கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது


கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது
x

கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீரில் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10.911 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 92.8 சதவீதம் ஆகும். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு கிடு கிடுவென உயர்ந்தது.

பூண்டி ஏரியில் இருந்து அதிக பட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி முதல் தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரி நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி முழு கொள்ளளவான 3.231 டி.எம்.சி. யை எட்டியது. பூண்டி ஏரியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பட்டு வருகிறது. இதற்கிடையே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதை அடுத்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கையும் அனுப்பினார். ஆனால் தொடர்ந்து கிருஷ்ணா நீர் பூண்டி எரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகிறது. பூண்டி ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியிலிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 23 அடியை நெருங்கி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.98 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு வினாடிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக 13 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் நீர்மட்டம் மொத்த உயரமான 21 அடியில் 19.92 அடிக்கு நிரம்பியுள்ளது. ஏரியில் 2.996 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீர் தேவைக்காக 187 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 831 மில்லியன் கனஅடியும், தேர்வாய்கண்டிகை ஏரியில் 482 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.


Next Story