அரசு டவுன் பஸ் சிறைபிடிப்பு
அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது மழவராயனேந்தல் கிராமம். இந்த கிராமத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து தினமும் 6 முறை மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் சென்று வந்தது. கொரோனா காலத்தில் இருந்து டவுன் பஸ் 4 முறை மட்டும் சென்று வந்தது. பின்னர் 2 முறையாக குறைக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள், பொது மக்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இருந்தும் பஸ் சரியாக வராததால் நேற்று காலை மழவராயனேந்தல் கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. தகவல் அறிந்து வந்த திருப்பாச்சேத்தி போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி தினமும் 4 முறை குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் விட ஏற்பாடு செய்வதாக கூறியதன் பேரில், கிராம மக்கள் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.