கொரோனாவால் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? ஏரியூர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கொரோனாவால் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?  ஏரியூர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 30 Oct 2022 6:45 PM GMT (Updated: 30 Oct 2022 6:45 PM GMT)

கொரோனாவால் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? ஏரியூர் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தர்மபுரி

ஏரியூர், அக்.31-

ஏரியூரில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பஸ்கள் நிறுத்தம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் ஒன்றான ஏரியூர் மாவட்டத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைமை இடமான ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக மலைக்கிராமங்கள் அதிகளவில் உள்ளன.

சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கும், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஏரியூரையே நம்பி உள்ளனர். எனவே சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் ஏரியூருக்கு வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்து செல்ல பஸ்களையே பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து ஏரியூருக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்களில் பெரும்பாலானவை கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு நிறுத்தப்பட்டுள்ளன.

சேலம், திருப்பூர் பஸ்கள்

ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெரும்பான்மையான மக்கள் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் கர்நாடகா மாநிலம் ராம்நகர், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு ஏரியூரில் இருந்து தினமும் தலா ஒரு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதேபோல் ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் தேவைக்காக ஏரியூரில் இருந்து சேலத்திற்கு தினமும் 2 முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.

இவற்றில் கர்நாடக மாநிலம் ராம் நகருக்கு மட்டுமே தற்போது அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஏரியூரில் இருந்து திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிடுவம்பட்டி, ஏரியூர் வழியாக மேச்சேரி செல்லும் பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் காத்திருப்பு

ஏரியூருக்கு தினமும் 4 முறை இயக்கப்பட்டு வந்த ஒரு தனியார் பஸ் மற்றும் 3 முறை இயக்கப்பட்டு வந்த மற்றொரு தனியார் பஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. சில தனியார் பஸ்கள் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே ஏரியூருக்கு இயக்கப்படுகின்றன.

இதனால் பஸ்சுக்காக பயணிகள் சில மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கம் குறைந்ததால் ஏரியூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

கடும் போராட்டம்

இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏரியூரைச் சேர்ந்த வர்த்தகர் சேட்டு:- ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டத்திற்கும், திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும் அதிகளவில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். குறிப்பாக இந்த பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் விவசாயிகள் பல்வேறு தேவைகளுக்காக சேலத்திற்கு சென்று வருகிறார்கள். இதனால் இந்த பகுதி மக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு சேலம்- ஏரியூர் இடையே ஒரு நாளில் 2 முறை பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் இருந்து ஏரியூருக்கு தினமும் இயக்கப்பட்ட பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வர்த்தகர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல் 50 சதவீத தனியார் பஸ்களும் கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு ஏரியூருக்கு வந்து செல்வதில்லை. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பஸ்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிக்கும் நிலை

சோளபாடியை சேர்ந்த கமலேசன்:- ஏரியூருக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட பல அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஏரியூரில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இல்லை. இதனால் அவசரப் பணிகளுக்காக ஏரியூருக்கு வந்தவர்கள் இரவு நேரத்தில் தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பகல் நேரத்திலேயே சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏரியூருக்கு சில பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த மக்களின் இயல்பான போக்குவரத்து தடைபடுவதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் பழையபடி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களையும் ஏரியூர் பகுதிக்கு இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story