ஒரே நாளில் 5 அரசு பஸ்கள் ஜப்தி
திருப்பூரில் வெவ்வேறு வழக்குகளில் விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூரில் வெவ்வேறு வழக்குகளில் விபத்து இழப்பீடு வழங்காததால் ஒரே நாளில் 5 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அரசு பஸ் ஜப்தி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 29). இவர் அவினாசியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29-1-2014 அன்று அவினாசியில் இரவு நேரத்தில் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இது தொடர்பாக விபத்து நஷ்டஈடு கேட்டு திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். கடந்த 12-9-2018 அன்று ரூ.10½ லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.
திருப்பூர் டி.கே.டி.ஷோரூம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 12-3-2018 அன்று பல்லடம் ரோட்டில் நடந்து சென்றபோது அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இவர் விபத்து இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். 19-7-2022 அன்று ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.
பனியன் நிறுவன தொழிலாளி பலி
சேவூர் குன்னாங்கல்புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (55). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 10-3-2019 அன்று தண்டுக்காரன்பாளையம் அருகே சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி இறந்தார். அவருடைய குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 16-9-2022 அன்று ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் அரசு போக்குவரத்துக்கழகம் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
திருப்பூர் பலவஞ்சிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (42). டிரைவர். இவர் கடந்த 21-1-2014 அன்று மோட்டார் சைக்கிளில் தாராபுரம் ரோடு பலவஞ்சிப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அரசு பஸ் மோதி பலியானார். அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 5-12-2018 அன்று ரூ.16½ லட்சம் இழப்பீடு வழங்க சமரச மையத்தில் தீர்வு காணப்பட்டது. அதன் பிறகும் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை நேற்று கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் கருணாகரன் (59). திருப்பூர் பாண்டியன்நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 11-5-2013 அன்று சென்னைக்கு அரசு பஸ்சில் சென்றபோது உளுந்தூர்பேட்டையில் பஸ், வேனில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இவர் விபத்து இழப்பீடு கேட்டு திருப்பூர் விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். 27-4-2019 அன்று ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். மேற்கண்ட 5 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பழனிசாமி ஆஜராகி வாதாடினார்.
ஒரே நாளில் 5 அரசு பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் அந்த வழித்தடங்களுக்கு மாற்று பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.