பஸ்கள் மோதி விபத்து; 9 பேர் படுகாயம்


பஸ்கள் மோதி விபத்து; 9 பேர் படுகாயம்
x

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ்கள் மோதின

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இருந்து நெம்பர்-10 முத்தூருக்கு இன்று மாலை 33 சி என்ற அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்சை பாலதுறையை சேர்ந்த சிவக்குமார்(வயது 36) ஓட்டினார். கண்டக்டராக செட்டிபாளையத்தை சேர்ந்த முருகேசன்(50) பணியாற்றினார்.

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவில் ஒரு தனியார் பள்ளி அருகே வளைவில் திரும்பியபோது, கோவையில் இருந்து உடுமலை நோக்கி சென்ற தனியார் பஸ் திடீரென அரசு பஸ் மீது மோதியது. மேலும் கிணத்துக்கடவு நோக்கி வந்த தீயணைப்பு வாகனம் மீது 2 பஸ்களும் மோதி நடுரோட்டில் நின்றன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

9 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்கள் பலத்த சேதம் அடைந்தன. மேலும் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இதை அறிந்த கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமிபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் சிவக்குமார், கண்டக்டர் முருகேசன் மற்றும் தனியார் பஸ் பயணிகள் நாராயணசெட்டிபாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (60), சாந்தி (40), கார்த்திகா (31), கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ராஜ்குமார் (49), பாலக்காட்டை சேர்ந்த தானிபிரான்சிஸ் (22), பொள்ளாச்சியை சேர்ந்த பால்ராஜ் (65), லட்சுமி (50) ஆகிய 9 பேரை மீட்டு கோவை, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story