பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி


பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.

பள்ளி மாணவர்கள்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் கிணத்துக்கடவு செல்ல காலை 8 மணி, மதியம் 2.30 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் பஸ் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு செல்லும் பஸ்சில் கிணத்துக்கடவு, கோவை ஆகிய பகுதிகளுக்கு மாணவர்கள், கூலிதொழிலாளர்கள் பயணிக்கின்றனர்.

ஆனால் மாலை 4.15 மணிக்கு பள்ளி முடிந்த பிறகு, அந்த நேரத்தில் கிணத்துக்கடவில் இருந்து இம்மிடிபாளையத்திற்கு மாணவர்கள் வர பஸ் வசதி இல்லை. அதன்பிறகு மாலை 6 மணிக்குதான் பஸ் வசதி உள்ளது. அதுவரை மாணவர்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

'தினத்தந்தி' நாளிதழில் செய்தி

இதனால் ஒருசில மாணவர்கள் ஆட்டோவில் தங்களது வீடுகளுக்கு வருகின்றனர். மற்றவர்கள் கிணத்துக்கடவில் இருந்து வேறு பஸ்சில் ஏறி லட்சுமி நகர் பிரிவில் இறங்கி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து தங்களது வீடுகளுக்கு திரும்புகின்றனர். அவர்கள் புத்தக பைகளை சுமந்து கால்கடுக்க நடந்து சென்று சிரமம் அடையும் நிலை இருந்தது. இதுகுறித்து கடந்த 24-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. மேலும் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு பஸ் வசதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளை அழைத்து பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார்.

மகிழ்ச்சி

அதன் அடிப்படையில் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் இருந்து 33சி என்ற பஸ் மாணவர்களை ஏற்றிக்கொண்டு லட்சுமி நகர், இம்மிடிபாளையம், தேவராடிபாளையம், பாறை வழியாக கோதவாடி சென்றது. இந்த பஸ்சில் இம்மிடிபாளையம் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

இதுகுறித்து இம்மிடிபாளையம் மாணவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி முடிந்து நடந்தே வந்தது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும் கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக உடனடியாக மாணவர்கள் வருவதற்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story