செந்துறை-சேலம் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி


செந்துறை-சேலம் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி
x

செந்துறை-சேலம் புதிய வழித்தடத்தில் பஸ் வசதி தொடங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை பஸ் நிலையத்தில் செந்துறை- சேலம் புதிய வழித்தடத்தில் பஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்து, பஸ்சில் பயணம் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் (நேற்று) செந்துறை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செந்துறை-சேலம் வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கப்படுகிறது. இந்த புதிய வழித்தடப் பஸ் (வழித்தடம் எண்.619சி) தினமும் காலை 5.30 மணிக்கு அரியலூரில் புறப்பட்டு செந்துறை பஸ் நிலையத்தை வந்தடையும். மீண்டும் இப்பஸ் செந்துறையிலிருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு அரியலூர் வழியாக கொளக்காநத்தம், செட்டிகுளம், துறையூர், நாமக்கல் வழியாக சேலத்தை சென்றடையும். இப்புதிய வழித்தடப் பஸ்சின் மூலம் அரியலூர்-செந்துறை மற்றும் செந்துறை-சேலம் தினசரி தலா ஒரு நடை இயக்கப்படுவதால், செந்துறை பொதுமக்களுக்கு கூடுதல் பஸ் வசதி கிடைப்பதுடன் செந்துறை கிராம மக்கள் நேரடியாக சேலம் செல்வதற்கு புதிதாக பஸ் வசதியினை பெறுகிறார்கள். எனவே, இதனை பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். இதில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story