'தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது' போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி


தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x

‘தமிழகத்தில் பஸ் கட்டணம் உயராது’ என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

நாமக்கல்

பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டைமேட்டில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சம்மேளனத்தின் புதிய தலைவராக தன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

லாரி தொழிலில் இருக்கின்ற பிரச்சினைகளை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று அவற்றை தீர்ப்பதற்கு நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

டீசல் விலை உயர்வு

தற்போது மிக முக்கியமான 2 பிரச்சினைகளை முன்னிறுத்தி இருக்கின்றார்கள். போலீசார் மூலம், ஆன்லைனில் லாரிகளுக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்படுவதாகவும், வாகனங்கள் அந்த பகுதியில் செல்லாத நேரத்திலும், வழக்குகள் பதிவு செய்வதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.‌ இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து துறை கடந்த காலங்களில் செழுமையான துறையாக விளங்கியது. ஆனால் அந்தநிலை மாறி, மத்திய அரசு டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதால், எல்லோருக்கும் மிக கஷ்டமான சூழல்தான். குறிப்பாக பஸ் போக்குவரத்து, லாரி போக்குவரத்து நடத்துபவர்கள், மிக சிரமமான சூழலில் இருப்பதை அறிகிறோம்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம், மிகப்பெரிய கடனில் இருக்கிறது. காரணம் டீசல் விலை உயர்வு தான். இந்த டீசல் விலை உயர்வை ஒரு வகையிலும் கணக்கிட முடியாமல், கட்டுக்கடங்காமல் உயர்த்தியதால் தான், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பஸ் கட்டணம் உயராது

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி 1,000 புதிய பஸ்கள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கான டெண்டர் விடும் பணிகள், தற்போது நடைமுறையில் இருக்கிறது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

பொதுமக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் பஸ் கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அருகில் உள்ள மாநிலங்கள் பஸ் கட்டணத்தை உயர்த்தி இருந்தாலும், தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது என்பதற்காக பஸ் கட்டணம் உயர்த்தக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

மினி பஸ் உரிமையாளர்கள், முதல்-அமைச்சரை சந்தித்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அது குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கிறோம். விரைவில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். நாமக்கல்லில் லாரிகளை நிறுத்த 'யார்டு' அமைக்க வேண்டும் என ராமலிங்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தி இருக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனும் தெரிவித்து இருக்கிறார். முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாகனம் வாங்குவதற்கும் டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story