ஒரக்கலியூர் கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு
ஒரக்கலியூர் கிராமத்துக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு கொடுத்்தார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம், பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராசிசெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரக்கலியூர் கிராமத்துக்கு இரு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கிராமத்துக்கு பஸ் இயக்கப்படவில்லை. பஸ் டிரைவர்களிடம் கேட்டால் சாலை மோசமாக உள்ளதால் இயக்க முடியவில்லை. எனவே சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஒன்றிய நிர்வாகத்திடம் தார் சாலை அமைக்க கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. ஊராட்சியின் சார்பில் மண் கொட்டி தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது. அதன்பிறகு அரசு போக்குவரத்து கழகத்துக்கு மனு கொடுத்தும், பஸ் இயக்க நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்வோர் 2½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்சில் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலா, சக்தி, பழனி மற்றும் பலர் உடன் இருந்தனர்.