தரைப்பாலம் மூழ்கியதால் பஸ் போக்குவரத்து நிறுத்தம்


தரைப்பாலம் மூழ்கியதால் பஸ் போக்குவரத்து நிறுத்தம்
x

கோடாலி கருப்பூரில் உடைந்த கதவணையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கியதால் அன்னங்காரம்பேட்டையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அரியலூர்

வெள்ளப்பெருக்கு

தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடிகால் வாய்க்காலின் மதகு உடைந்து வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மதகு கதவு உடைந்தது

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் சிந்தாமணி காட்டாற்று ஓடையில் இருந்தும் வரும் தண்ணீர் குறிச்சி கலிங்கு வழியாக பூவாய் மண்டபம் என்று அழைக்கப்படும் கோடாலி கருப்பூர் 7 கண் மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலப்பது வழக்கம். இந்த 7 கண் மதகில் முதல் மதகின் கதவு உடைந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் வடிகால் ஓடையில் தண்ணீர் புகுந்தது. சிறிது சிறிதாக வெள்ள நீர் கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடி காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓட தொடங்கியது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கின. இதையடுத்து மதகை சரி செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

தரைப்பாலம் மூழ்கியது

புதிதாக கதவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கதவு தயாரிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை பழுதடைந்த கதவை அகற்றிய பிறகு பொருத்த முடியும் என்பதால் பழைய உடைந்த கதவை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வெள்ள நீர் தா.பழூர் ஒன்றியத்தின் தாழ்வான பகுதியாக கருதப்படும் அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சூழ்ந்துள்ளது.

தா.பழூரிலிருந்து அன்னங்காரம்பேட்டை செல்லும் சாலையில் உள்ள வட்டார வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பெட்டாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி விட்டது. இந்தப்பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

ஆபத்தை உணராமல்...

அதுபோல் சோழமாதேவி ஆய் பாளையம் பகுதியில் இருந்து அன்னங்காரம்பேட்டை செல்லும் பாதையில் பூவோடை குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தண்ணீரின் அதிகரிப்பால் மூழ்கி விட்டது. இதனால் அன்னங்காரம்பேட்டை கிராமத்திற்கு எந்த பகுதியில் இருந்தும் வாகன போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. ஆனால் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பாலங்களில் சீறிப்பாயும் தண்ணீருக்கு இடையில் வாகனங்களை செலுத்தி பயணித்து வருகின்றனர்.

உடைந்த கதவை அப்புறப்படுத்தி புதிய கதவை பொருத்தும் பணி தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) மும்முரமாக நடைபெற உள்ளது.

முகாம்களில் தங்க அழைப்பு

அன்னங்காரம்பேட்டை கிராமத்தில் தொடர்ந்து வெள்ள நீர் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மீண்டும் கிராம மக்கள் முகாம்களில் தங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கிராம மக்கள் ஆபத்தை உணராமல் அங்கேயே தொடர்ந்து இருந்து வருகிறார்கள். தற்போது கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சூழ்ந்து இருந்த தண்ணீரின் அளவு சிறிதளவு குறைந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கோடாலி கருப்பூர் மதகு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு

- சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகனை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அவரது அலுவலகத்தில் சந்தித்து ஏற்கனவே கோடாலி கருப்பூர் 7 கண் மதகை முற்றிலும் இடித்து அகற்றிவிட்டு புதிதாக பாதுகாப்பான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வடிகால் மதகு அமைக்க வேண்டும் என்றும், தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ள விவசாய நிலங்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன், இந்த மதகு பழங்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். அந்த ஷட்டர்கள் மிகவும் உயரமானவை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக பழைய சட்டங்களை அகற்றிவிட்டு புதிய ஷட்டர் அமைப்பதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனை சரி செய்யக்கூடிய பணியை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.


Next Story