பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம்


பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம்
x

திருப்பூரில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். உயிர்பலி ஏற்படும் முன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பூர்


திருப்பூரில் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். உயிர்பலி ஏற்படும் முன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பஸ் பயணம்

திருப்பூரில் இருந்து கோவைக்கு கல்லூரிகளில் படிப்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். 50 சதவீத மாணவர்கள் கல்லூரி பஸ்களை பயன்படுத்தினாலும், 50 சதவீத மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் சாலை வழியாகவும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வழியாகவும் மாணவர்கள் கோவைக்கு செல்வது வழக்கம்.

குறிப்பாக அவினாசி சாலை வழியாக காலை 7.30 முதல் 8.20 மணி வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணம் செய்கின்றனர். புஷ்பா சந்திப்பு, குமார்நகர், எஸ்.ஏ.பி., காந்திநகர், பெரியார்காலனி, அனுப்பர்பாளையம், திருமுருகன்பூண்டி வரை அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சில் ஏறும்போதே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

கோவைக்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழலில் படிக்கட்டு பயணம் ஆபத்து என்பதை உணராமல் தினமும் மாணவர்கள் அந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில பஸ்களில் மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் அதேபோன்று படிக்கட்டில் நின்றபடியே செல்கின்றனர். படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தால் உயிர்பலி ஏற்படும் என்ற பய உணர்வும் இல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.

நடவடிக்கை

காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கல்லூரி மாணவர்கள் அதிகமாக ஏறுவதால் மற்ற பயணிகளை பஸ் டிரைவர், நடத்துனர் ஏற்றுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி, காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லும் பஸ்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்ய வேண்டும்.

அரசு மற்றும் தனியார் பஸ்களில் படிக்கட்டு பயணத்தை அனுமதிக்கும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவர்கள் கோவைக்கு சென்று, வர வசதியாக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


Related Tags :
Next Story