கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது
கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாயம்பாடி கிராமத்தில் இருந்து கடந்த 23-ந் தேதி மாலை கள்ளக்குறிச்சி நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது. அந்த பஸ் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பஸ்சுக்கு வழி விடாமல் சென்றதுடன், டிரைவர் ஏழுமலையிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் ஆத்திரத்தில் பஸ் மீது கல்வீசி முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பஸ் டிரைவர் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து, சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது சடையம்பட்டு ஓம்சக்தி கோவில் அருகில் வசிக்கும் வேலப்பகவுண்டர் மகன் செல்வகுமார் (வயது 47) என்பவர் பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், செல்வகுமாரை கைது செய்தனர்.