பல்லாங்குழி சாலையில் பழுதாகும் பஸ்கள்
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பல்லாங்குழி சாலையில் பஸ்கள் பழுதாகும் நிலை உள்ளது. அதை சீரமைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் பல்லாங்குழி சாலையில் பஸ்கள் பழுதாகும் நிலை உள்ளது. அதை சீரமைக்க பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பள்ளத்தால் ஆபத்து
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் கோவை, திருப்பூர், பழனி, சென்னை, பெங்களூரு, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதை தவிர சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கிடையில் பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் வெளியே வரும் இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த பள்ளத்தில் பஸ்சின் சக்கரங்கள் இறங்கி ஏறும் போது, பின் பகுதி தரையில் அடித்தப்படி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் பஸ்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பதே தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
சீரமைக்க வேண்டும்
பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் கோவை பஸ்கள் வெளியே வரும் இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மழைக்காலம் என்பதால் அந்த பல்லாங்குழி சாலையில் மழைநீர் நிரம்பி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதற்கிடையில் பஸ்சிற்காக வரும் பயணிகள் பள்ளத்தில் ஆழம் தெரியாமல் விழும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளத்தில் சிக்கி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே முதியவர்கள், குழந்தைகள் விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் பள்ளத்தில் ஏறி இறங்கும் போது பஸ்களின் பின்புறம் தரையில் பயங்கர சத்தத்துடன் அடித்தப்படி செல்கிறது. இதனால் பஸ்கள் பழுதாகும் நிலை உள்ளது. எனவே ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.