சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் அலைமோதிய கூட்டம்
சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் அலைமோதிய கூட்டம்
பொள்ளாச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பஸ்களில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் நபர்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியில் இருந்து கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் வால்பாறையில் வசிக்கும் நபர்கள் திருப்பூர், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில்பொங்கலுக்கு வால்பாறைக்கு செல்வதற்கு பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு வந்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்களில் முண்டியடித்துக் கொண்டு ஏறினர். சிலர் பொருட்களை ஜன்னல் வழியாக தூக்கி வீசி இருக்கையில் இடம் பிடித்தனர். நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் பஸ் ஏறி வால்பாறைக்கு சென்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
பயணிகள் கடும் அவதி
ஒவ்வொரு பண்டிகையின் போதும் வால்பாறை செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய உள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்கியும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்குவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய உள்ளது.
மேலும் பஸ்சில் இடம்பிடிக்க ஓட வேண்டிய உள்ளது. இதன் காரணமாக முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் வால்பாறைக்கு செல்ல வாடகை கார்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வேறு வழி இல்லாமல் கூடுலாக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய உள்ளது. எனவே பண்டிகை காலங்களில் கூடுதலாக பஸ்களை வால்பாறைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கூடுதலாக சிறப்பு பஸ்கள்
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பண்டிகை காலங்களில் மற்ற பகுதிகளுக்கு செல்வதை விட வால்பாறைக்கு செல்ல அதிகமாக கூட்டம் இருக்கும். இதை தடுக்க பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோன்று கோவை, திருப்பூர், பழனி, மதுரை போன்ற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கலுக்கு ஊருக்கு சென்று திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.