நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடும் பஸ்கள்
பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ரவுண்டானா பகுதியில் நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
போக்குவரத்து இடையூறு
பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவை, திருப்பூர், பழனி, உடுமலை, ஆனைமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பயணிகளை பஸ் நிலையத்திற்குள் சென்று இறக்கி விடாமல் ரவுண்டானா பகுதியில் இறக்கி விடுகின்றனர். நடுரோட்டில் பயணிகள் கூட்டமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.
நடவடிக்கை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை நெரிசலை குறைக்கவும் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த பிறகு சில தனியார் பஸ்கள் நடுரோட்டில் வைத்து பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் குழந்தைகளையும், பைகளையும் தூக்கி கொண்டு சாலையை கடந்து செல்லும் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.