பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விபத்து ஏற்பட வாய்ப்பு
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து கோவை, மதுரை, பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரெயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும்.
இதனால் பயணிகள் மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரெயில் நிலையத்திற்கு பஸ் வசதி இல்லை. மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டிய உள்ளது. இதனால் முதியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் அமாவாசை நாட்களில் பஸ் நிறுத்தத்தில் கூட்டமாக நின்று பஸ் ஏற வேண்டிய உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ரெயில் நிலையத்திற்கு பஸ் வசதி
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் ரெயிலுக்கு காலை நேரத்திலும், திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் போது இரவு நேரத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதேபோன்று மாசாணியம்மன் கோவிலுக்கு அமாவாசை நாட்களில் மதுரையில் இருந்து வரும் ரெயிலில் ஏராளமான பயணிகள் வருகின்றனர். பஸ்சிற்காக ரோட்டோரத்தில் நிற்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் வயதானவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து மார்க்கெட் ரோடு வந்து பஸ் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மார்க்கெட் ரோட்டில் செல்லும் பஸ்களை திருச்செந்தூர் ரெயில் வரும் போது பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று அமாவாசை நாட்களில் ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கும் அதிகாரிகள் மதுரை ரெயில் வரும் நேரத்தை பொறுத்து பஸ்களை ரெயில் நிலையம் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தால் பக்தர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.