23 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலதிபர் கைது


23 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலதிபர் கைது
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கொலை முயற்சி வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

கடலூர் குண்டுஉப்பலவாடி சப்தகிரிநகரை சேர்ந்தவர் அல்லா பஹஷ். இவருடைய மகன் அப்துல்ரியாஸ் (வயது 47). இவர் கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த லோகநாதனை கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பான வழக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் அவர் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தும், அவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் அப்துல்ரியாசை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் மேற்பார்வையில் கடலூர் தேவனாம்பட்டினம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், முருகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதற்கிடையில் இவர் தொழிலதிபராக உயர்ந்து, கடலூர் குண்டுஉப்பலவாடி மெயின்ரோட்டில் பல்பொருள் அங்காடி, உணவகம் நடத்தி வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இவர் மறைந்த பிரபல ரவுடி காமராஜின் கூட்டாளி என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story